செல்போன் திருடிய ஓட்டல் ஊழியர் கைது
புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய ஓட்டல் ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் சுற்றிவளைத்து பிடித்தார்.
புதுச்சேரி
புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய ஓட்டல் ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் சுற்றிவளைத்து பிடித்தார்.
கல்லூரி மாணவர்
புதுவை அபிஷேகப்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 21). தவளக்குப்பத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விநாயகம் தனது படிப்புக்கு தேவையான புத்தகங்களை சென்னையை சேர்ந்த நண்பரிடம் கேட்டிருந்தார். அவரது நண்பரும் புத்தகங்களை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பஸ்சில் கொடுத்து அனுப்பினார்.
புத்தகங்களை வாங்கிச்செல்வதற்காக நேற்று அதிகாலை 3 மணிக்கு புதுவை பஸ் நிலையத்திற்கு வந்து அங்குள்ள இருக்கையில் விநாயகம் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அவர் தூங்கி விட்டார்.
செல்போன் திருட்டு
அப்போது அவரின் சட்டை மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை யாரோ ஒருவர் திருடினார். திடுக்கிட்டு எழுந்த விநாயகம், அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் அந்த வாலிபரை பிடிக்க விநாயகம் முடிவு செய்தார்.
மறுநாள் விநாயகம் அவரது நண்பர்களுடன் புதுவை பஸ் நிலையம் வந்து செல்போன் திருடிய வாலிபர் இருக்கிறாரா? என்று ரகசியமாக கண்காணித்தார். அப்போது செல்போன் திருடிய வாலிபர் அங்கு நின்றார். அவரை விநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தபோது, செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
ஓட்டல் தொழிலாளி
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கிருஷ்ணகுமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விநாயகம் செல்போன் உள்பட 9 செல்போன்களை மீட்டனர். பின்னர் கிருஷ்ணகுமாரை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.