புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை


புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை
x

புதுவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

புதுச்சேரி

புதுவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

வெயிலின் தாக்கம்

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் புதுவையில் பகலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் உக்கிரத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

இந்தநிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த மேகம் கூடுவதும் கலைவதுமாக போக்கு காட்டியது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக காலையில் லேசான தூறல் இருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் வெயிலின் கோர தாண்டவம் தொடர்ந்தது.

இதேபோல் நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் திடீரென்று வானத்தில் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. மழை பெய்வதற்கான அறிகுறியுடன் காற்று வீசியபடி இருந்தது.

விடிய விடிய மழை

இரவு 9 மணி முதல் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து லேசாகவும், பலமாகவும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. இடி, மின்னலுடன் புதுவை நகர் மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்தது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், பாவாணர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது. வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளிலும் கழிவுநீர் தேங்கி நின்றது.

அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகளும் உடனடியாக சரி செய்யப்பட்டதால் மழைநீரும் வேகமாக வடிந்தது.

அதிகபட்சம் 16.5 செ.மீ. மழை

புதுவை நகரின் முக்கிய கழிவுநீர் வாய்க்கால்களான பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், உப்பனாறு உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரப்பகுதியில் ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக அங்குள்ள படுகை அணை நிரம்பி வழிகிறது. மேலும் படகு குழாமில் உள்ள படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

புதுவை நகரப்பகுதி- 10.6 செ.மீ.

பாகூர்- 16.5 செ.மீ.

திருக்கனூர்- 7.6 செ.மீ.

பத்துக்கண்ணு- 12 செ.மீ.


Next Story