கார் மீது கன்டெய்னர் லாரி மோதி மளிகை கடைக்காரர், டிரைவர் பலி


புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த போது கார் மீது கன்டெய்னர் லாரி மோதி மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் பலியாயினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த போது கார் மீது கன்டெய்னர் லாரி மோதி மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் பலியாயினர்.

மளிகை கடைக்காரர்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 55). இவர் அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவரது அண்ணன் மகள் திருமணத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக குடும்ப உறவினர்கள் ஏற்கனவே சென்று விட்ட நிலையில் முத்துக்குமாரசாமி மட்டும் இன்று அதிகாலை வளவனூரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். காரை வளவனூர் தென்னந்தோப்பு வீதியை சேர்ந்த முத்து (52) ஓட்டினார்.

அப்பளமாக நொறுங்கிய கார்

இந்த கார் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் அருகே அதிகாலை 4.45 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே புதுச்சேரியில் இருந்து நெட்டப்பாக்கம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி எதிரே முத்துக்குமாரசாமி வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கன்டெய்னர் லாரிக்குள் சிக்கி கார் தலைகுப்புற கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி முத்துக்குமாரசாமி, முத்து ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். ஆனால் அவர்களை உடனடியாக மீட்க முடியாததால் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே பலி

உடனடியாக சம்பவ இடத்துக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் மூலம் லாரியை அகற்றினார்கள்.

பின்னர் காருக்குள் சிக்கி இருந்த முத்துக்குமாரசாமி, முத்து ஆகியோரை மீட்டு பார்த்த போது அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் அறிந்து இறந்து போனவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. பலியான முத்துக்குமாரசாமி புதுவை பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதியின் உறவினர் ஆவார்.

தூக்க கலக்கத்தில் விபத்து

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கன்டெய்னர் லாரி ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. விபத்து நடந்ததும் தப்பி ஓடிய லாரி டிரைவரான உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த நூர்முகமது (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விபத்தின் போது லேசான காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் உள்ள கொசு விரட்டிக்கான திரவம் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து திரவம் லோடை ஏற்றிக் கொண்டு நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிக்காக கிரேன்கள் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் குவிந்து இருந்தனர். இதனால் 100 அடி சாலை, திண்டிவனம் சாலை, வழுதாவூர் சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி போக்கு வரத்தை போலீசார் சரி செய்தனர்.


Next Story