பசுமையான இந்தியாவை விரைவில் உருவாக்க முடியும்


பசுமையான இந்தியாவை விரைவில் உருவாக்க முடியும்
x

தூய்மையான, பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும் என ஆரோவில்லில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

தூய்மையான, பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும் என ஆரோவில்லில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் தூய்மை பணி

புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான ஆரோவில்லில் புதுச்சேரி சரக்குகள்-சேவை வரி, மத்திய கலால் வரி இயக்குனரகம் மற்றும் ஆரோவில் நிர்வாகம் இணைந்து நடத்தும் ஒரு நாள் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பிரதமர் அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தால் நாட்டில் தொற்றுநோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் செலவு செய்யக்கூடிய பெருமளவு பணம் மிச்சப்படுத்தப்படுகிறது.

தூய்மையான சுற்றுப்புறத்தை ஏற்படுத்துதல், கழிப்பறைகளை கட்டுதல், திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் பிரதமர் மோடி கவனம் செலுத்தினார். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. இந்த சாதனையை படைத்த புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

தூய்மை இந்தியா

தலைமைச் செயலர் மற்றும் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தூய்மையான மற்றும் பசுமையான புதுச்சேரியை உருவாக்குவற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தூய்மை மற்றும் பசுமை செயல்பாடுகளில் இன்று (நேற்று) காலை முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பஞ்சாயத்து அமைப்புகள் ஈடுபட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அரவிந்தர் குறிப்பிட்டதைப் போல நமக்கு விடுதலை மட்டுமல்ல ஆன்ம விடுதலையும் அவசியம். அப்போது தான் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் போது உற்சாகம் கிடைக்கும். பிரதமர் அறிவித்த ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் மூலமாக பல சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தி சுதந்திர இந்தியாவின் பெருமையை உணருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் தூய்மையான, பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி, ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story