52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்


52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
x

அரசின் பல்வேறு செலவினங்களுக்கான 52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி

அரசின் பல்வேறு செலவினங்களுக்கான 52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி

புதுவை அரசின் பல்வேறு செலவினங்களுக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு சம்பந்தப்பட்ட துறைகள் வாரியாக கோப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது சாலை பாதுகாப்பு குறித்த செயல் திட்டத்துக்கும், குப்பை அள்ளும் பணிக்காக ரூ.34 கோடியே 9 லட்சத்து 62 ஆயிரம் வழங்கவும், பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக்கல்லூரி சொசைட்டிக்கு ரூ.21 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரூ.20 கோடி மானியம்

மேலும் தீயணைப்புத்துறையில் 3 உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்கவும், உயர் தொழில்நுட்ப கல்வி மையத்துக்கு ரூ.20 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரம் மானியம் வழங்கவும், பள்ளி முதல்வர்கள் 4 பேரை மத்திய தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை நகர்ப்புற மேம்பாட்டு முகமைக்கு ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் மானியம், தொழிற்பேட்டைக்கான நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவது, ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தை அரசே வழங்குவது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

52 கோப்புகளுக்கு ஒப்புதல்

அதுமட்டுமின்றி முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.43 கோடியே 30 லட்சம் வழங்கவும், காரைக்கால் பஜன்கோவுக்கு ரூ.33 லட்சத்து 58 ஆயிரம் மானியம் வழங்கவும், புதுவை உயர்கல்வி சங்கத்துக்கு ரூ.12 கோடியே 50 லட்சம் மானியம் வழங்கவும், உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை மறுஆய்வு செய்யவும், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக செயல்பாட்டை கவனிக்க குழு அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இவைகளுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.


Next Story