400 கிலோவில் பூதம் உருவத்திலான 'சாக்லெட்'
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லெட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லெட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
400 கிலோ எடை
புதுவை மிஷன் வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் சாக்லெட் மூலம் தலைவர்களின் உருவம் செய்து அவ்வப்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களை சாக்லெட் கொண்டு வடிவமைத்துள்ளனர்.
தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில் அற்புத விளக்கை கையில் வைத்திருக்கும் பூதம் வடிவிலான சாக்லெட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சிற்பம் 5 அடி உயரத்தில் 400 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
182 மணி நேரம்...
இதனை செப் ராஜேந்திரன் தங்கராசு என்பவர் 182 மணிநேரத்தில் உருவாக்கியுள்ளார். இது அடர் பழுப்பு மற்றும் வெள்ளை நிற சாக்லெட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட் பூதத்தை புதுவை வரும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிலர் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.