ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கல்லூரி மாணவியை குத்தி படுகொலை செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருபுவனை
கல்லூரி மாணவியை குத்தி படுகொலை செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கல்லூரி மாணவி கொலை
திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது 18), கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்தார். தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற கீர்த்தனாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
சிறையில் அடைப்பு
இந்த படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேசை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடியான அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வர முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் முகேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜித்தாகோதண்டராமன் மற்றும் மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
குண்டர் தடுப்பு சட்டம்
இதையடுத்து காலாப்பட்டு மத்திய சிறை அதிகாரிகளிடம், முகேசை கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் சமர்பித்தனர். இதன் மூலம் முகேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் ஒரு வருடத்துக்கு அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.