நிரவியில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்


நிரவியில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்
x

சதுர்த்தி விழாவுக்காக நிரவியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

நிரவி

சதுர்த்தி விழாவுக்காக நிரவியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி, கைவினை கலைஞர்கள் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காரைக்கால் மற்றும் நிரவியில் பல்வேறு இடங்களில் ராஜஸ்தான் கலைஞர்கள் முகாமிட்டு விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.

நவரச விநாயகரென்று போற்றப்படும் பல்வேறு முகபாவங்கள், தோற்றங்கள், அபிநயங்கள், அவதார வடிவங்களாக விநாயகர் சிலைகள் இங்கு நேர்த்தியாக தயாரிக்கப்படுகின்றன. அழகிய வண்ணங்களால் ஜொலிக்கும் விநாயகர் சிலைகளுக்கு கடந்த காலங்களில் தட்டுப்பாடு நிலவியது. அதனை சரிசெய்யும் வகையில் இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகள் நிரவியில் தயாரிக்கப்படுகின்றன.

13 அடி உயரம்

காகித கூழ், கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டும், தேங்காய்நார், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவற்றை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தியும் செய்யப்படுகிறது. வாட்டர் கலர் வர்ணம் பூசப்படுவதால் சிலைகளை கரைக்கும் போது எளிதில் கரையும் தன்மை கொண்டுள்ளதோடு, மாசு ஏற்படா வண்ணம் இவை தயாரிக்கப்பட்டு உள்ளன.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் வழக்கமாக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை உருவாக்கப்படும். ஆனால் இந்தாண்டு 3 அடி முதல் 13 அடி உயரம் வரையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

சிலைகள் அனுப்பி வைப்பு

இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் காரைக்கால் மாவட்டம் மட்டுமின்றி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


Next Story