என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி
புதுவையில் என்ஜினீயரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் வழங்குவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவையில் என்ஜினீயரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் வழங்குவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயரிடம் மோசடி
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சிவஞானம், என்ஜினீயர். இவர் ஆன்லைனில் வேலை வாய்ப்பு தேடி வந்தார். அப்போது அவரின் டெலிகிராம் செயலிக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக குறுந்தகவல் வந்தது. இதனை உண்மை என்று நம்பிய சிவஞானம் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் செலுத்தினார்.
அப்போது லாபத்துடன் சேர்த்து சிவஞானம் வங்கி கணக்கில் ரூ.18 லட்சம் இருப்பதாக காண்பித்தது. அந்த பணத்தை அவர் எடுக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் சிவஞானம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எச்சரிக்கை
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் 'ஆன்லைன் மோசடி கும்பல் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆசையை தூண்டிவிட்டு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வருகிறார்கள். ஆன்லைன் மோசடி தொடர்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வரும் தகவல்கள் எதையும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம்' என்றனர்.