தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி


தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி
x

நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன மேலாளர்

புதுச்சேரி உழவர்கரை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அடியாருக்கு அடியார் (வயது 40). தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி வித்யா. இவர்களுடன் லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த புருஷோத்தமன்-செல்வி தம்பதி குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் புருஷோத்தமனும், செல்வியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியாருக்கு அடியார்-வித்யா தம்பதியரிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறினர். இதனை நம்பிய அடியாருக்கு அடியார் தன்னுடைய சேமிப்பு பணம் மற்றும் மனைவி, மாமியார், தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்து ரூ.70 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் புருஷோத்தமன் நிலம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அடியாருக்கு அடியார் இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்டபோது, ஆரோவில் பகுதியில் மேரி டெய்சி என்பவரிடம் இருந்து ரூ.50 லட்சம் கொடுத்து 3 ஆயிரம் சதுரஅடி நிலத்தை வாங்கி இருப்பதாக கூறியுள்ளார்.

ரூ.1.35 கோடி மோசடி

இதற்கிடையே புருஷோத்தமன், அடியாருக்கு அடியாரிடம் கடப்பாக்கத்தில் ஒரு நிலம் வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பிய அவர், தனது சொத்தை விற்று ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட புருஷோத்தமன், தனது பெயரிலும், மனைவி பெயரிலும் நிலத்தை பதிவு செய்துகொண்டார்.

இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்டபோது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன்-செல்வி தம்பதியை வலைவீசி தேடி வருகின்றார்.


Next Story