பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
காரைக்கால்
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
மாங்கனி திருவிழா
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சி, காரைக்கால் அம்மையார்- பரமதத்த செட்டியார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மறுநாள் (ஜூலை 2-ந் தேதி) காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும், அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை தீர்க்கும் வகையில் மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
ரசாயனம் மூலம்...
மாங்கனி திருவிழாவின்போது பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்காக வெளியூர்களில் இருந்து காரைக்காலுக்கு டன் கணக்கில் மாங்காய்கள் வந்துள்ளன. அவற்றை ஒரு சில வியாபாரிகள் இயற்கை முறையில் பழுக்க வைக்கின்றனர்.
பெரும்பாலான வியாபாரிகள் ரசாயன கற்கள் மற்றும் ரசாயன திரவங்களை தெளித்து பழுக்கவைத்து வியாபாரம் செய்வதாகவும், அவற்றை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், எனவே காரைக்காலில் விற்பனை செய்யப்படும் மாங்கனிகளை ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்திருந்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
அதன்பேரில், காரைக் காலில் உள்ள பழக்கடை மற்றும் குடோன்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த மாங்கனிகள் மற்றும் பழவகைகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். அப்போது அழுகிய நிலையில் இருந்த மாங்கனிகளை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மாங்கனி திருவிழாவின்போது நல்ல மாங்கனிகளை விற்பனை செய்யவேண்டும் என கடைக்காரர்களை உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தினர். ரசாயன கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்றால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மளிகை மற்றும் உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து, காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.