தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்


தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
x

மரக்காணம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்வதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மரக்காணம்

மரக்காணம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்வதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் மூழ்கியது

மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இதில் வண்டிப் பாளையம்-ஆத்திக்குப்பம் கிராமங்களுக்கு இடையே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நடுக்குப்பம், தேவிகுளம், முறுக்கேறி, ஆலத்தூர், கிளாம்பாக்கம், சித்தனபாக்கம், ஓமிபேர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தின் வழியாக தான் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பங்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் வண்டிப்பாளையம்-ஆத்திக்குப்பம் இடையே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

போக்குவரத்து துண்டிப்பு

தரைப்பாலமே தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவர்கள் சுமார் 10 கி.மீ. சுற்றி கந்தாடு, மரக்காணம் வழியாக புதுச்சேரி செல்லும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது இந்த நிலை தான் நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story