விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
புதுச்சேரி
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடிக்க தடை
வங்கக்கடலில் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம்15-ந்தேதி முதல் 61 நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுதுபார்த்து மீன்பிடிக்க தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தயாரானார்கள்.
ரங்கசாமி பூஜை
விசைப்படகு மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைத்து மீன்பிடிக்க தேவையான தளவாடங்களை படகில் ஏற்றி தயார் நிலையில் இருந்தனர். மேலும் இதற்காக சிறப்பு பூஜைகளும் நடந்தன. பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் படகுகளில் தெளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தார். அவர் படகுகளுக்கு பூஜை செய்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கே.எஸ்.பி.ரமேஷ், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி உள்பட மீனவ பஞ்சாயத்தார், விசைப்படகு மீனவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நள்ளிரவில் சென்றனர்
அதைத்தொடர்ந்து படகுகளை எடுத்துக்கு கொண்டு சிறிது தூரம் சென்ற மீனவர்கள் மீண்டும் துறைமுகத்தில் கொண்டுவந்து படகினை நிறுத்தினார்கள். நள்ளிரவில் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.