இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாகூர்
கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டறை உரிமையாளர்
கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 51). இவர் கடலூர்- புதுச்சேரி சாலையில் நோணாங்குப்பத்தில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி உமாபாரதி. அங்கன்வாடி ஊழியர்.
தனது மோட்டார் சைக்கிள் பழுதானதால், கடந்த சில நாட்களாக உறவினரின் மோட்டார் சைக்கிளை விநாயகமூர்த்தி பயன்படுத்தி வந்தார். அந்த மோட்டார் சைக்கிளை நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதன் அருகில் மனைவியின் மொபட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது.
தீப்பிடித்து எரிந்தது
இந்த நிலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்து விநாயகமூர்த்தி தூக்கதில் இருந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டில் இருந்தவர்களை தட்டி எழுப்பி, பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதற்குள் இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தொழில் போட்டி காரணமாக மர்மநபர்கள் யாரோ இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இது குறித்து விநாயகமூர்த்தி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருக்கனூர் அருகே ஆண்டிப்பாளையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வீட்டின் வராண்டாவில் நிறுத்தியிருந்த மூன்று இருசக்கரக வாகனங்களை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது குறிப்பிடத்தக்கது.