சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும்
புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரங்கசாமியுடன் சந்திப்பு
திரைப்பட நடிகர் தம்பி ராமைய்யா இன்று புதுச்சேரி வந்தார். அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவருடன் சமீபத்தில் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற சினிமா மக்கள் தொடர்பாளர் குமரனும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக குமரன் கூறியதாவது:-
எண்ணிக்கை சரிவு
புதுவையில் கொரோனா காலகட்டத்துக்கு முன்பு படப்பிடிப்புக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுவையை பொறுத்தவரை அனைத்து மொழிகளின் படங்களுக்கும் இங்குதான் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் விளம்பர சூட்டிங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் கட்டண உயர்வு காரணமாக இங்கு படப்பிடிப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
குறைக்க வேண்டும்
கடந்த 6 மாதமாக சூட்டிங்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை பல்வேறு நடிகர்களும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் கட்டணத்தை குறைப்பாக உறுதியளித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் மீண்டும் படப்பிடிப்பு அதிகரிக்கும். அப்போது உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். இதனால் அவர்களது வாழ்விலும் ஒளி பிறக்கும்.
இவ்வாறு குமரன் கூறினார்.
கலைமாமணி விருது
நாட்டுப்புற கலைஞரான குமரன், சமீபத்தில் 2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதினை பெற்றார். இவர் காளியாட்டம், குறத்தி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல கலைகளில் தேர்ச்சிபெற்று கலைநிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் சினிமா துறையில் புதுவை மக்கள் தொடர்பு பணியையும் கவனித்து வருகிறார். இவர் சினிமா படப்பிடிப்புகள் பலவற்றுக்கும் புதுவையில் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார்.