பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு


பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு
x

புதுவையில் பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி

பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

புதுவை வேளாண்துறை இயக்குனர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீடு திட்டம்

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பயிர் காப்பீடு திட்டம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்திட புதுச்சேரி அரசால் கடந்த 7-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளும் விவசாயிகள் அனைவருக்கும், அவர்கள் செலுத்த வேண்டிய பிரிமீயத்தொகையுடன் மானிய தொகையையும் அரசே செலுத்தும்.

பயிர் அறுவடை சோதனைகள் நவீன செயலி மூலம் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளின்படி மகசூல் இழப்பு ஏற்படும் இடங்களில், பதிவு செய்துகொண்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்கப்படும். இத்திட்டமானது நடக்கும் காரீப், சொர்ணவாரி, குறுவை, பருவம் முதல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்சூரன்சு நிறுவனங்களான பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் மூலம் புதுச்சேரி பகுதியிலும், ஷீமா இன்சூரன்சு நிறுவனம் மூலம் காரைக்கால் பகுதியிலும், ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்சு நிறுவனம் மூலம் ஏனாம் பகுதியிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

31-ந்தேதி வரை...

மத்திய வேளாண் அமைச்சகம் இணையதள பதிவுக்கு கடந்த 10-ந்தேதி வரைஅனுமதி அளித்தது. ஆனால் புதுச்சேரியில் நடக்கும் காரிப் மற்றும் காரைக்காலில் நடக்கும் குறுவை பருவத்துக்கு உண்டான இணையதள பதவிற்கான கால அவகாசம் மிக குறுகியதாக இருந்ததால் எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடு இணையதள பதவிற்கான தேதியினை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்க வேளாண்துறை மத்திய அமைச்சகத்திடம் கோரியது.

புதுவை அரசின் கோரிக்கையினை ஏற்று மத்திய வேளாண் அமைச்சகம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட பதிவிற்கான காலக்கெடுவினை வருகிற 31-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள உழவர் உதவியகங்களில் உள்ள வேளாண் அலுவலரை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story