செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு பதிவு


செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு பதிவு
x

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுவை தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செல்போன் செயலி

புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்வதில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், மாணவ, மாணவிகளின் நலன்கருதி அவரவர் படித்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலமாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் பதிவு செய்துகொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்தநிலையில் 2022-23-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களின் விவரங்கள் மட்டும் பள்ளி கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பம் மையம் உதவியுடன் செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 நாட்கள்

எனவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளின் வேலைவாய்ப்பு பதிவுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. கல்வித்தகுதியை மொபைல் ஆப் (செல்போன் செயலி) மூலம் பதிவு செய்யும்முறை தொழிலாளர்துறை இணையதளமான https://labour.py.gov.in-ல் கொடுக்கப்படும்.

இந்த செல்போன் செயலி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 30 நாட்கள் செயல்படும். இந்த லிங்கை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story