மின்துறை ஊழியர்கள் தர்ணா
புதுவை மின்துறையில் பணிபுரியும் கட்டுமான உதவியாளர்கள் பதவி உயர்வு வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுவை மின்துறையில் பணிபுரியும் கட்டுமான உதவியாளர்கள் பதவி உயர்வு வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
புதுச்சேரி மின்துறையில் 380 கட்டுமான உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், தங்களை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கிடப்பில் கிடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புதுவை ஐ.டி.ஐ. நலச்சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்தவுடன் மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) பதவி உயர்வு கோப்பினை மின்துறை செயலருக்கு அனுப்பி ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அவர்கள் பதவி உயர்வுக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் பெறாத பட்சத்தில் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக மின்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.