எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர்

நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எலக்ட்ரீசியன்

புதுவை வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவா் சேகர். இவரது மகன் சந்துரு (வயது 25), எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

செல்போனில் அடிக்கடி வாட்ஸ்-அப் சாட்டிங் செய்யும் பழக்கம் சந்துருவுக்கு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 1.30 மணியளவில் சந்துருவின் அண்ணன் கண்ணன் இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் சந்துரு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்துருவை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்துரு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வீடியோ பதிவு சிக்கியது

இது தொடர்பாக சேகர் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். சந்துருவின் சாவு குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

மேலும் சந்துருவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் மற்றொருவருடன் வீடியோகாலில் நிர்வாணமாக பேசியதும், அதனை அந்த நபர் பதிவு செய்து, சந்துருவுக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடாமல் இருக்கவேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்துரு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

மர்மநபர் யார்?

செல்போனில் நிர்வாண படத்தை பகிர்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த நபரின் செல்போன் எண்ணை சந்துரு, தற்கொலைக்கு முன் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சந்துருவுக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாண வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story