போதைப்பொருட்கள் தீ வைத்து அழிப்பு
புதுச்சேரி
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கோர்ட்டு உத்தரவின் பேரில் தீ வைத்து அழிக்கப்பட்டன.
போதைப்பொருட்கள்
புதுச்சேரி ரெயில்வே போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒடிசாவில் இருந்து புதுச்சேரி வந்த ரெயிலில் திடீர் சோதனை நடத்தினர். அந்த ரெயிலில் 565 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 80 ஆகும். பின்னர் இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த போதைப்பொருட்களை கடத்தி வந்தது யார் என்ற விசாரணை நடத்தினர்.
அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜய்தாஸ் (வயது 49), அரிகர் திருப்பாதி (42) ஆகிய 2 பேரும் அங்கிருந்து புதுவைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஒடிசா சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் புதுச்சேரி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தீ வைத்து கொளுத்தினர்
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை தீ வைத்து அழிக்கும்படி ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ரெயில்வே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், போலீசார் இன்று மாலை அந்த போதைப்பொருட்களை ரெயில்வே போலிஸ் நிலையத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டி பெட்ரோல் ஊற்றிதீ வைத்து கொளுத்தினர்.