மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை


மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x

வளர்ப்பு தாய்-தந்தையை எரித்து கொலை செய்த மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி

வளர்ப்பு தாய்-தந்தையை எரித்து கொலை செய்த மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சொத்து தகராறு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தருமாபுரி அகத்தியர் கோட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 74). இவரது மனைவி வசந்தா (62). நாராயணசாமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தனது உறவினரின் மகள் ஆனந்தியை தத்தெடுத்து வளர்த்தனர்.

மேலும் அவருக்கு முருகவேல் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதையடுத்து நாராயணசாமி- வசந்தா தம்பதியுடன் ஆனந்தி (27), அவரது கணவர் முருகவேல் (36) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை கட்டுவதற்கு முருகவேல் பணம் கொடுத்து உதவினார். எனவே அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி ஆனந்தி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.

எரித்து கொலை

இந்த நிலையில் முருகவேல் தனது மாமனார் நாராயணசாமியிடம், வீட்டை ஆனந்தி பெயருக்கு எழுதி கொடுக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி முருகவேலும், ஆனந்தியும் சேர்ந்து வளர்ப்பு பெற்றோரை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேல், ஆனந்தியையும், அவர்களுக்கு துணையாக இருந்ததாக ஆனந்தியின் மாமனார் ரத்தினம், குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 3-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முருகவேல், ஆனந்தி ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார். ரத்தினம், குமார் ஆகிய 2 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.


Next Story