தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சாலை மறியல்


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சாலை மறியல்
x

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணா சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தை இந்திய தொழிற் சங்க மையத்தின் அகில இந்திய துணைத்தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், அனிபால் கென்னடி, சம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்துறை தனியார் மயம், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

சாலை மறியல்

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அண்ணா சிலையை சுற்றி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழைய பஸ் நிலையம், அண்ணா சாலை, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை ஆகிய 4 இடங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

வெள்ளை அறிக்கை

முன்னதாக எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மய மாக்கப்படுவதில் பெரிய அளவிலான கையூட்டை பெற்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. மின்துறையை தனியார் மயமாக்க வேண்டியதன் அவசியம் என்ன?. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிடும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.


Next Story