வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்
பருவமழைக்கு முன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி
பருவமழைக்கு முன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உடனடியாக தூர்வார வேண்டும்
கூட்டத்தில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பொதுப்பணித்துறை மூலம் செய்ய வேண்டிய முக்கிய பணிகளான வடிகால்களை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். வெள்ளநீரை வெளியேற்ற திறன் வாய்ந்த நீர்மூழ்கி மோட்டார், பொக்லைன் எந்திரம் போன்ற தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் அனைவரும் 24 மணி நேரமும் பணியில் இருந்து உடனுக்குடன் அனைத்து நடவடிக்கைகளிலும் (வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்) ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.