பட்டாசுகள் வெடித்து 'ஸ்டேஷனரி' கடை எரிந்து நாசம்
காரைக்காலில் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஸ்டேஷனரி கடை எரிந்து நாசமானது.
காரைக்கால்
தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஸ்டேஷனரி கடை எரிந்து நாசமானது.
'ஸ்டேஷனரி' கடை
காரைக்கால் புதிய பஸ் நிலையத்தையொட்டி புளியங்கொட்டை சாலை உள்ளது. இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், கடைகள் என ஏராளமாக உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் கலியமூர்த்தி என்பவர் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார்.
இந்தநிலையில் தீபாவளியை முன்னிட்டு அவர் கடையில் பட்டாசு உள்ளிட்ட வெடிப்பொருட்கள் வைத்து விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக முதற்கட்டமாக தற்போது சிறிதளவு பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கடையில் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கடையில் இருந்த மின்சாதன பொருட்களோடு வெடிகள் உரசி இன்று மாலை திடீரென தீப்பிடித்தது. வெடிகள் வெடித்து சிதறியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
போராடி அணைத்தனர்
இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையிலான வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.