கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
புதுவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
120 பேர் பாதிப்பு
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பானது கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த சில வாரங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கையானது தற்போது 3 இலக்கத்துக்கு மாறியுள்ளது.
இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,479 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 120 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதில் 83 பேர் புதுச்சேரியையும், 33 பேர் காரைக்காலையும், 4 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மக்கள் அதிர்ச்சி
இன்று 46 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 15 பேர், வீடுகளில் 390 பேர் என 405 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 8.11 சதவீதமாகவும், குணமடைவது 98.63 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்தில் ஒருவர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கியும் சாப்பிட்டு வருகின்றனர்.
தடுப்பூசி
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 235 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,525 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 4 ஆயிரத்து 276 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 21 லட்சத்து 58 ஆயிரத்து 901 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.