காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை நடத்தினார்கள்.

புதுச்சேரி

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை நடத்தினார்கள்.

குற்றச்சாட்டு

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், பொருளாதார வீழ்ச்சி காரணமாக 20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும், 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு அறிவித்தபடி 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்காதது, விவசாய கடன்களை ரத்து செய்யாதது, இலவச அரிசி வழங்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து பாதயாத்திரை நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

பாதயாத்திரை

அதன்படி இன்று புதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலையில் இருந்து யாத்திரை தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மறைமலையடிகள் சாலை, அண்ணசாலை, காமராஜ் சாலை, காந்தி வீதி, நேரு வீதி பட்டேல் சாலை, உழவர்சந்தை வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து பாதயாத்திரை நிறைவடைந்தது. பாத யாத்திரையின்போது மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட் டது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, நிர்வாகிகள் இளையராஜா, வேல்முருகன், ஆர்.இ.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடன் தள்ளுபடி

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,'மக்களுக்கு மிக முக்கிய தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பால், தயிர் என அனைத்தின் மீதும் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, ரூ.2 ஆயிரம் கோடி மானியம் என தேர்தலின்போது அறிவித்தனர். அதை செயல் படுத்தவில்லை' என்றார்.


Next Story