சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு
சமையல் கியாஸ் மானியம் வழங்க செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் விவரங்களை சேகரிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி
சமையல் கியாஸ் மானியம் வழங்க செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் விவரங்களை சேகரிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கியாஸ் மானியம்
புதுவையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300-ம், மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு ரூ.150-ம் மானியம் வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மானியத்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மத்திய பெட்ரோலிய அமைச்சக்த்திடம் இருந்து நுகர்வோர் குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் மானியம் வழங்கப்படவில்லை.
எனவே புதுவை அரசே நுகர்வோர் விவரங்களை பெற்று திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக நுகர்வோர் குறித்த விவரங்களை குடிமைப்பொருள் வழங்கல்துறை கேட்டுள்ளது.
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நுகர்வோர் எண்
முதல்-அமைச்சரின் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை செயல்படுத்த சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் நுகர்வோர் விவரங்களை ஏஜென்சிகள் பகிர்வதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. எனினும் காலதாமதத்தை தவிர்க்கவும், உடனே இத்திட்டத்தை செயல்படுத்த நுகர்வோர்கள் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக பிராந்தியம், கியாஸ் ஏஜென்சியின் பெயர், நுகர்வோர் எண், செல்போன் எண், ரேஷன்கார்டு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை பதிவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செல்போன் செயலி பதிவிறக்கத்திற்கு https://pdsswo.py.gov.in/helpdesk மற்றும் https://dsca.py.gov.in என்ற முகவரியிலும், https://pdsswo.py.gov.in/lpg என்ற முகவரியில் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.
மேற்கூறிய இணையதளம் மற்றும் செல்போன் செயலி குறித்து ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் நுகர்வோர்கள் 9944052612, 9944052718 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.