தொழிலாளிக்கு சொந்தம் கொண்டாடி 2 பெண்களுக்கு இடையே மோதல்
திரு-பட்டினத்தில் தொழிலாளிக்கு சொந்தம் கொண்டாடி 2 பெண்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
திரு-பட்டினம்
திரு-பட்டினத்தில் தொழிலாளியை சொந்தம் கொண்டாடி 2 பெண்கள் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஒருவருக்காக 2 பெண்கள் மோதல்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மலர்விழி (வயது 45). அவரது கணவர் பக்கிரிசாமி. இந்தநிலையில் பக்கிரிசாமி கடந்த 8 ஆண்டுக்கு முன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து மலர்விழி காரைக்கால் கீழவாஞ்சூர் பகுதியில் தனியாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த ஏற்கெனவே திருமணமான தொழிலாளி கண்ணையன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கண்ணையனுடன் மலர்விழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையறிந்த கண்ணையனின் மனைவி சியாமளா கவுரி (55) ஆத்திரம் அடைந்தார். அவர் நேராக மலர்விழி நடத்தும் ஓட்டலுக்கு சென்றார். அங்கு மலர்விழியிடம், எனது கணவரை கள்ளப்புருஷனாக ஏன் வைத்துள்ளாய்? என்று கூறி சண்டையிட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இருதரப்பிலும் வழக்கு
இதில் காயம் அடைந்த மலர்விழி, திரு-பட்டினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சியாமளா கவுரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் தனது கணவர் குறித்து விசாரிக்க சென்றபோது, கணவர் கண்ணையனும், அவருடன் இருந்த மலர்விழியும் சேர்ந்து தன்னை தாக்கியதாக சியாமளா கவுரியும் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் மலர்விழி, கண்ணையன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரை சொந்தம் கொண்டாடி 2 பெண்கள் மல்லுக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.