முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி பயணம்


முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி பயணம்
x

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி செல்கிறார்.

புதுச்சேரி

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி செல்கிறார்.

தயாராகும் கட்சிகள்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதையொட்டி பாட்னாவில் முதல் கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். தற்போது 2-வது கட்டமாக பெங்களூருவில் கூடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

நாளை டெல்லி பயணம்

இதில் கலந்துகொள்ளுமாறு அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது.

எனவே கூட்டணி கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனையேற்று கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் கலந்துகொள்கிறார்.

இதற்காக அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். இந்த பயணத்தின்போது வாய்ப்பு கிடைத்தால், மத்திய மந்திரிகளை சந்தித்து, புதுவைக்கான திட்டங்கள் குறித்து பேசவும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். அதன்பின் அவர் புதுச்சேரி திரும்புகிறார்.


Next Story