செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம்


செங்கழுநீர் அம்மன் கோவிலில்  தேரோட்டம்
x

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரியாங்குப்பம்

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர்.

விழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

தற்காலிக பஸ்நிலையம்

தெற்கு பகுதி போக்குவரத்து சூப்பிரண்டு ரவிக்குமார் ஏற்பாட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து வெளியே வருபவர்கள் சின்ன வீராம்பட்டினம் ஓடைவெளி, மணவெளி வழியாக அரியாங்குப்பம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனம், தற்காலிக ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக கடற்கரை பகுதியில் தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 15-க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசித்து விட்டு செல்லலாம்.

ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிச்சாமி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், தனி அதிகாரி சுரேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story