மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருகை
புதுவைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் வருவதையொட்டி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
புதுவைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் வருவதையொட்டி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
மத்திய மந்திரி வருகை
புதுச்சேரிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை வருகிறார். லாஸ்பேட்டை மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
இந்தநிலையில் பணியாளர் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள கோப்புகள் தொடர்பாக ஏற்கனவே நிதித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு அரசு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டுள்ளது.
மத்திய மந்திரி வருகை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன்குமார், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் ஜவகர், நெடுஞ்செழியன், மணிகண்டன், வல்லவன், செந்தில் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூடுதல் நிதி கேட்க முடிவு
கூட்டத்தில் நிதி மந்திரியின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிதிப்பற்றாக்குறையால் நிலுவையில் உள்ள திட்டங்கள், அறைகுறையாக கிடப்பில் உள்ள கட்டிட பணிகளுக்கு தேவையான நிதிகள் குறித்து அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் முதல்-அமைச்சர் ரங்கசாமி துறை ரீதியாக கேட்டறிந்தார்.
அவற்றை நிறைவேற்ற நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதி கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் திருத்திய மதிப்பீட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி கேட்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.