சிவன், முருகனாக சித்தரித்த ரொட்டி-பால் ஊழியர்கள்


சிவன், முருகனாக சித்தரித்த ரொட்டி-பால் ஊழியர்கள்
x

முதல்-அமைச்சர் ரங்கசாமியை சிவனாகவும், அமைச்சர் நமச்சிவாயத்தை முருகனாகவும் சித்தரித்து ரொட்டி-பால் ஊழியர்கள் வைத்த படம் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியை சிவனாகவும், அமைச்சர் நமச்சிவாயத்தை முருகனாகவும் சித்தரித்து ரொட்டி-பால் ஊழியர்கள் வைத்த படம் வைரலாகி வருகிறது.

ரொட்டி, பால் ஊழியர்கள்

புதுவை அரசின் கல்வித்துறையில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ரொட்டி, பால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரூ.600 சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இவர்கள், தற்போது ரூ.6 ஆயிரத்து 458 பெற்று வந்தனர்.

இந்தநிலையில் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பல்வேறு அரசுத்துறைகளில் சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.10 ஆயிரம் சம்பளம்

இதனிடையே ரொட்டி, பால் ஊழியர்களும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ரூ.10 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரொட்டி-பால் ஊழியர்கள் புதுவை சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஊர்வலத்துக்கு முன்பு பிரசார வாகனம் ஒன்றும் வந்தது. அந்த வாகனத்தில் அவர்கள் வைத்திருந்த படமானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சிவன்-முருகன்

அதாவது முதல்-அமைச்சர் ரங்கசாமியை சிவனாகவும், அமைச்சர் நமச்சிவாயத்தை முருகனாகவும் அவர்கள் சித்தரித்திருந்தனர். இந்த ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்கள் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவரிடம் தங்களை விரைவில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அவர்கள் வைத்திருந்த படமானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story