புறவழிச்சாலை பணியால் வாய்க்கால்கள் மூடல்


புறவழிச்சாலை பணியால் வாய்க்கால்கள் மூடல்
x

பாகூர் பகுதியில் புறவழிச்சாலை பணியால் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளதால் மழை காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

பாகூர்

பாகூர் பகுதியில் புறவழிச்சாலை பணியால் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளதால் மழை காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

புறவழிச்சாலை

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் - புதுச்சேரி இடையே சாலை விரிவாக்க பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருசில மாதத்தில்பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையின் ஒரு பகுதியாக புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் எம்.என்.குப்பத்தில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து மங்கலம், உறுவையாறு, கோர்க்காடு, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், அரங்கனூர்,சேலியமேடு, பாகூர் வழியாக கடலூருக்கு புறவழிச்சாலை செல்கிறது.

இந்த சாலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக புறவழிச்சாலையோரம் இருந்த பாசன, வடிகால் வாய்க்கால்கள் பலஇடங்களில் மூடப்பட்டுள்ளன. மேலும் சாலை உயர்த்தப்படுவதால் விளைநிலங்கள் பள்ளமாக மாறியுள்ளன.

மழைநீர் புகுந்துவிடும்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் மழை பெய்தது. இந்த சிறிய மழைக்கே பாகூர்- பின்னாச்சிக்குப்பம் சாலையில் 4 வழிச்சாலைக்காக மூடப்பட்ட பாசன வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுபோல் பல இடங்களில் பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டும், அகலம் குறைந்தும் உள்ளது. தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் மழை பெய்தால் பாசன வாய்க்கால்களில் வரும் தண்ணீர் போகுவதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் புகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள், புற வழிச்சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story