தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
x

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 4 பேர், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி அக்டோபர் 3-ந் தேதி நாடு தழுவிய கருப்பு தினமாக கடைபிடிக்க அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

அதன்படி புதுவையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாலாஜி, ஞானசேகரன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கருப்புக்கொடியுடன் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.யு.டி.யு.சி. மாநில தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சிவக்குமார், எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story