பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் தமிழிசையுடன் பா.ஜ.க. தலைவர்கள் திடீர் சந்திப்பு


பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் தமிழிசையுடன் பா.ஜ.க. தலைவர்கள் திடீர் சந்திப்பு
x

சந்திர பிரியங்கா பதவி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினார்கள்.

புதுச்சேரி

சந்திர பிரியங்கா பதவி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினார்கள்.

சந்திர பிரியங்கா விவகாரம்

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த வாரம் சந்திர பிரியங்கா திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், சந்திர பிரியங்கா அவரது துறை ரீதியான பணிகளில் தொய்வு இருப்பதாக அவரை முதல்-அமைச்சர் பதவி நீக்கம் செய்தார். ராஜினாமா என்பது தவறானது என்று தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் புதுவை அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் ஒருவாரத்துக்கு மேலாகியும் இதுவரை சந்திர பிரியங்கா விவகாரம் குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது.

தனித்தனியாக சந்திப்பு

இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, மாநில பா.ஜ.க. தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி. சந்தித்துப் பேசினார். அப்போது சபாநாயகர் செல்வமும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவித்தது.

அதேநேரத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கவர்னர் தமிழிசையை தனியாக சந்தித்து பேசினார். கடந்த வாரம் அரசு முறை பயணமாக லண்டன் சென்று புதுவை திரும்பிய நிலையில் அதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. புதுவை அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழலில் கவர்னரை, பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என அடுத்தடுத்து சந்தித்து இருப்பது மேலும் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.


Next Story