காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா


காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா
x

நிர்வாகி மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, காரைக்காலில் பா.ஜ.க.வினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

நிர்வாகி மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, காரைக்காலில் பா.ஜ.க.வினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெண் மானபங்கம்

காரைக்கால் அம்மன் கோவில்பத்து, சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் சந்திரன் மனைவி கலைச்செல்வி (வயது42). இவர் கடந்த 3-ந் தேதி அன்புநகர் வழியாக சென்றபோது, சிலர் வழங்கிய மதம் தொடர்பான துண்டுபிரசுரங்களை மற்றவர்களை போல், கலைச்செல்வியும் வாங்கி கொண்டு நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த, காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் மணிகண்டன் (35) மற்றும் சிலர், கலைச்செல்வியை வழிமறித்து, ஏன் துண்டுபிரசுரத்தை வாங்கினாய்? எனக் கூறி, அவதூறாக திட்டி, சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க வந்த பெண்ணின் மகன் சாரதியையும் அவர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

பொய் வழக்கு?

இது குறித்து கலைச்செல்வி, காரைக்கால் நகர போலீசில் மணிகண்டன் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரை சேனாதிபதி தலைமையில், மணிகண்டன் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர், மத துண்டு பிரசுரங்களை சாலையில் வழங்கிய போது, போக்குவரத்து இடையூறு இருந்ததாகவும், அந்த இடையூறை சரி செய்ய சென்ற மணிகண்டன் மற்றும் சிலர் மீது காரைக்கால் நகர போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும், எனவே உடனடியாக அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் அவர்களின் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அப்போது வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி அவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர். இந்த முற்றுகையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story