உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது


உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி தொடங்கியது.

காரைக்கால்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

உண்டியல் எண்ணும் பணி

இந்த நிலையில் சனிபெயர்ச்சி விழாவுக்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி இன்று தொடங்கியது.

இதில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

உண்டியல் எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்றும், இதன் முடிவில் எவ்வளவு பணம், நகை காணிக்கையாக வந்தது என்பது தெரியவரும். இதில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் உள்ளதா? என்பதும் உண்டியல் எண்ணும் பணியின் நிறைவில் தெரியவரும்.


Next Story