பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த வேண்டும் - தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
புதுவையில் கோவில் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
ஊர்வலம்
புதுவை காமாட்சி அம்மன்கோவில் நில மோசடி வழக்கில் பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த வேண்டும், அரசு இடங்கள் தனியார் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள் அபகரிக்கப்படுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடத்தை ஒப்படைக்கவும் நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாரம் துணை கலெக்டர் அலுவலகம் அருகே கூடினார்கள்.
பின்னர் அங்கிருந்து மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். ஊர்வலம் காமராஜர் சாலை, வி.வி.பி.நகர் வழியாக வழுதாவூர் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தது. அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் முன்னாள் மாநில செயலாளர் முருகன், பெருமாள், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்
புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி நிலம் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க் களான ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோரது குடும்பத்தினர் பெயரில் 4 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் 2 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவில் நிர்வாகத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறிவருகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோவில் நிலத்தை அபகரித்துள்ளனர்.
எதிர்க்கட்சிபோல்...
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி இல்லாத மாநிலங்களில், மாநில அரசை சீர்குலைக்க கவர்னர்கள், எதிர்க்கட்சிபோல் அரசியல் செய்கிறார்கள். கவர்னர்கள் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. அரசின் திட்டங்களை விமர்சிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் வெளிநாடு சென்றால் அதை விமர்சிக்கிறார்.
கவர்னர்களுக்கு அரசியல்வாதிபோல் பிரசாரம் செய்ய அதிகாரம் கிடையாது. எனவே கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.