சபரிமலை சென்ற அய்யப்ப பக்தர்களுக்கு பரிசோதனை
சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி
சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
புதுவை கலெக்டர் வல்லவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இருவார சேவை
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை 'சேவா பக்வாடா' எனப்படும் இருவார தொடர் சேவை புதுவை மாநிலத்தில் நடைபெற உள்ளது.
மேலும் புதுவை மாநிலத்தில் சந்திரயான் திட்டத்தின்கீழ் தொடர் சேவை அக்டோபர் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது ரத்தசோகை பரிசோதனை, தொற்றாநோய் பரிசோதனை, அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை, சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, மகப்பேறு பரிசோதனை, குழந்தை வளர்ச்சி பரிசோதனை, உடல்எடை பரிசோதனை செய்யப்படும்.
நிபா வைரஸ்
அக்டோபர் மாதம் 2-ந்தேதி கிராம சபா கூட்டம் நடத்தப்படுவதுபோல் சுகாதாரத்துறை சார்பில் ஆயுஷ்மான் சபா நடத்தி சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. சுகாதாரத்தை கடைபிடிக்கும் கிராமங்களை கண்டறிந்து விருது வழங்கப்படும்.
கடந்த சில நாட்களாக டெங்கு பரவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல் மாகி பகுதியில் நிபா வைரஸ் குறித்த அச்சம் உள்ளது. இதுவரை புதுவை மாநிலத்தில் யாருக்கும் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை.
பரிசோதனை
இந்த மாதம் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து சென்றுவர வேண்டும். திரும்பி வரும்போது அவர்களுக்கு தீவிர காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் வல்லவன் கூறினார்.
பேட்டியின்போது சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு உடனிருந்தார்.