விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
காரைக்காலில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
காரைக்கால்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில், காரைக்காலில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் திருநள்ளாறு வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜெயசிவராஜன், ஷெர்லி ஆகியோர் செய்திருந்தனர்.
அதேபோல் காரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. இதையொட்டி நகராட்சி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் அனைவரும் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.