வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி
புதுவை அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி செய்த இளைஞர் பெருமன்றத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும், புதுவையில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 60 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று அவர்கள் சாரத்தில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் அருகே கூடினார்கள். அங்கிருந்து காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார். காமராஜர் சாலை வழியாக வி.வி.பி.நகர் ஆர்ச் அருகே ஊர்வலம் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் கையில் பூட்டுகளுடன் அவர்களையும் தள்ளிக்கொண்டு செல்ல அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முயன்றனர்.
இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்த 5 பெண்கள் உள்பட 50 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.