மேலும் ஒரு வாலிபர் பலி
புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வானூர்
புதுச்சேரி மாநிலம் சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாவாடைராயன் (வயது 27). இவர் தனது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (19) என்பவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து வானூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலையில் தென் கோடிப்பாக்கம் பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து வேல்முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.