சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள்


சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள்
x

புதுவை சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி

சட்டமன்ற மாதிரி வரைபடத்தில் திருத்தங்கள் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

புதிய சட்டமன்ற கட்டிடம்

புதுவை சட்டமன்றம் பிரெஞ்சுக்கால கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் போதிய இடவசதி இல்லாததால் புதிதாக சட்டமன்றம் கட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டமன்றத்தை தட்டாஞ்சாவடி வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரைபடம்

புதுவை அரசின் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு மத்திய அரசு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய சட்டமன்றம் தொடர்பான வரைபடத்தை டெல்லியை சேர்ந்த கட்டிட வல்லுனர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே சட்டமன்ற கட்டிட வரைபடத்தை தயாரித்து காட்டினார்கள். அதனை பார்வையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி சில மாற்றங்களை தெரிவிக்க கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்ட வரைபடத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இன்று காண்பித்து விளக்கினார்.

திருத்தம் செய்ய...

மேலும் மராட்டியம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற கட்டிடங்களின் மாதிரிகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக சட்டசபை செயலாளர் தயாளன் விளக்கினார். அதன் அடிப்படையில் வரைபடத்தில் வாஸ்து அடிப்படையில் சில திருத்தங்களை செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் கூறிய திருத்தங்களை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பின் முதல்-அமைச்சரிடம் வரைபடத்தை காட்டி ஒப்புதல் பெறவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர், அரசு செயலாளர்கள் முத்தம்மா, மணிகண்டன், உதயகுமார், கேசவன், கலெக்டர் வல்லவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story