திருபுவனை பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி


திருபுவனை பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி
x

திருபுவனை பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருபுவனை

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பி.எஸ்.பாளையம் ஏரிக்கரை சாலையில் டிராக்டர் மோதி உயிருக்கு போராடினார். அப்பகுதிமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. சுமார் ஒரு மணிநேரம் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக இறந்துபோனார். மாணவியின் சாவுக்கு ஆம்புலன்ஸ் உரிய நேரத்துக்கு வராததே காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.அரியூர் மற்றும் காட்டேரிகுப்பத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வருவது ஒரு சில நேரம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story