அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அனைத்து கவர்னர்களும் செயல்படுகிறோம்


அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அனைத்து கவர்னர்களும் செயல்படுகிறோம்
x

அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு தான் செயல்படுகிறோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி

அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு தான் செயல்படுகிறோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கலந்துரையாடல்

புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ் நர்சீ பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை இன்று மாலை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

மாணவர்களுக்கான இன்றைய கல்விமுறை, சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களாக உருவாவதற்கான முயற்சி ஆகியவை குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலமைப்பு சட்டத்திற்கு...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. கவர்னரின் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. கவர்னர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று நினைத்து இருக்கலாம்.

கவர்னர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். இப்போது கவனம் கவர்னர்கள் பக்கம் திரும்பியுள்ளது. அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வது என்று சில அரசியல்வாதிகள் கிளம்பி இருக்கின்றார்கள். அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திப்பு

முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, பாரத் தர்ஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியின் 25 ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகள் நேற்று சந்தித்தனர். அப்போது, ஐ.பி.எஸ். அதிகாரிகள் பயிற்சி முடிந்து நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.


Next Story