மூதாட்டிக்கு நவீன இருதய சிகிச்சை
காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் மூதாட்டிக்கு நவீன இருதய சிகிச்சை நடைபெற்றது.
காலாப்பட்டு
புதுச்சேரியை சேர்ந்த 60 வயது மூதாட்டி அடிக்கடி சுய நினைவு இல்லாமல் கீழே விழுந்து மருத்துவ சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் குழு அவருக்கு முழு இருதய அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
முழு இருதய அடைப்பு என்பது மின் தூண்டல் இருதய வெண்ட்ரிக்களை அடையாமல் இருதயம் செயல் இழந்து போவதால் இருதயம் சுருங்கி விரிவதில் குறைபாடு ஏற்பட்டு போதுமான ரத்தம் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு சென்று அடையாமல் போகும். இதனால் சுயநினைவு இழப்பு மற்றும் மயக்கம் இறப்பு ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஊக்கத்தால், இருதய நிபுணர்கள் டாக்டர் அன்பரசன், டாக்டர் கிரண் ஆகியோர் இணைந்து மூதாட்டிக்கு இருதய பரிமாற்ற அமைப்பின் மின் முனையை நேரடியாக செயல்படுத்திட செயற்கை இருதய முடுக்கியை (பேஸ்மேக்கர்) நேரடியாக இருதய கடத்தி மண்டலத்தில் பொருத்தினர்.
வழக்கமாக இக்கருவி வலது பக்கத்தில் பொருத்தப்படும். இதனால் இருதய செயல்திறனில் சிறிது பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இக்குறையை நிவர்த்தி செய்ய நவீன சிகிச்சை முறையில் இருதய கடத்தி மண்டலத்தில் இதனை பொருத்தி பல்வேறு மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சை முறையில் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் முதன்முறையாக பிம்ஸ் மருத்துவமனையில் இதனை பொருத்தி வெற்றி பெற்றுள்ளோம் என்றும், நோயாளி தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.