புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்...! - சாலைகள் வெறிச்சோடின


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்...! - சாலைகள் வெறிச்சோடின
x

Image Courtesy: PTI (File Photo)

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுவை,

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் மாற்று கருத்துகள் எழுந்தன. முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. மாநில அந்தஸ்து என்பது அரசியலுக்காக பேசப்படுகிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் கருத்து தெரிவித்தார்.

இத்தகைய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. குறைவான அளவில் பஸ்கள் இயங்குவதாலும், ஆட்டோக்கள் இயக்கம் பாதிப்பாலும் சாலைகள் வெறிச்சோடின. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியில் உள்ள அதிமுக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாஜக-அதிமுக கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story