புதுச்சேரிக்கு விரைவில் பணியிட மாறுதல் வழங்கப்படும்


புதுச்சேரிக்கு விரைவில் பணியிட மாறுதல் வழங்கப்படும்
x

காரைக்காலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரைவில் புதுச்சேரிக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

புதுச்சேரி

காரைக்காலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரைவில் புதுச்சேரிக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

4 ஆண்டுகளாக...

புதுவை கல்வித்துறையில் பணியாற்றும் புதுச்சேரி ஆசிரியர்கள் 128 பேர் கடந்த 2019-ம் ஆண்டு காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் காரைக்காலில் 128 பேர் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் விதிப்படி புதுவை மாநிலத்தில் உள்ள பிற பிராந்தியங்களில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். காரைக்காலில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து அங்கு 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தங்களது குடும்பம் புதுச்சேரியில் உள்ளதால் அவர்கள், தங்களை புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இடமாறுதல் கொள்கை

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் அவர்களுக்கு புதுவைக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அதற்கான தனித்தனியான உத்தரவு வழங்கப்படவில்லை. மேலும் புதுச்சேரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காரைக்காலுக்கு செல்ல விரும்பவில்லை. மேலும் ஒரு பிரிவு ஆசிரியர்கள் இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றனர். இதனால் காரைக்காலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கியும், புதுச்சேரிக்கு வர முடியாமல் தொடர்ந்து அங்கேயே பணியாற்றும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து புதிய இடமாறுதல் கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டும் தொடங்கியுள்ள நிலையில் காரைக்காலில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேற்று காரைக்காலில் பணியை முடித்துவிட்டு புதுவைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டுமுன்பு இடமாறுதல் கேட்டு நள்ளிரவில் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி காலையில் சட்டசபைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அறிவுறுத்தினார்.

ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை

அதன்படி இன்று காலையிலேயே ஆசிரியர்கள் சட்டசபைக்கு திரண்டு வந்தனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி வராததால் அவர்களை பாரதி பூங்காவில் போலீசார் தங்க வைத்தனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பிற்பகலில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தார். அவரை அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் சீனுவாசன், பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியும் உடனிருந்தார்.

முரண்பாடு உள்ளதா?

அப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இடமாற்றல் கொள்கை குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டறிந்தார். இதில் முரண்பாடு ஏதேனும் உள்ளதா? என்று ஆசிரியர்களிடம் கேட்டார். அதனை ஏற்றுக்கொள்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் புதிய இடமாறுதல் கொள்கையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார். இடமாறுதலில் குழந்தைகள் வைத்திருப்போர், வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தினார்.

நீண்ட காலமாக...

நகரம், கிராமப்பகுதிகளுக்கு மாற்றிமாற்றி இடமாறுதல் வழங்கவேண்டும் என்றும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடமாறுதல் வழங்க தேவையில்லை என்றும் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

புதிய இடமாறுதல் கொள்கையை விரைவாக அமலுக்கு கொண்டுவந்து காரைக்காலில் பணிபுரியும் புதுச்சேரி ஆசிரியர்களை விரைவாக புதுச்சேரி பகுதிக்கும், புதுவையில் பணிபுரியும் காரைக்கால் ஆசிரியர்களை விரைவில் காரைக்காலுக்கும் இடமாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தை விவரங்களை சங்க நிர்வாகிகள் பாரதி பூங்காவில் காத்திருந்த ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story