துறைமுகத்துக்கு வந்த சிறிய ரக சரக்கு கப்பல்


துறைமுகத்துக்கு வந்த சிறிய ரக சரக்கு கப்பல்
x

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி எடுத்து செல்லும் விதமாக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்துள்ளது.

புதுச்சேரி

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி எடுத்து செல்லும் விதமாக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்துள்ளது.

தூர்வாரும் பணி

புதுவை துறைமுகத்தில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முகத்துவாரம் தூர்வாரப்பட்டு சரக்கு கப்பல் வெள்ளோட்டமும் நடந்தது. ஆனால் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதன் காரணமாக மீண்டும் கடல் முகத்துவாரத்தில் மணல் மேடுகள் உருவாயின. இந்தநிலையில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மீண்டும் கடல் முகத்துவாரம், துறைமுக பகுதியில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சுமார் 10 அடி ஆழத்துக்கும் மேலாக இந்த பகுதியில் தூர்வாரப்பட்டு உள்ளன. இதனால் சிறிய ரக சரக்கு கப்பல்களை இயக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சரக்கு கப்பல் வந்தது

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் எரிபொருள், மருந்துகள், உணவு பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கைக்கு தனியார் நிறுவனம் ஒன்று புதுவையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500 டன் சரக்குகளை கையாளும் சிறிய ரக கப்பல் ஒன்று புதுவைக்கு வந்துள்ளது. இந்த கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 300 டன் அரிசியை இலங்கைக்கு இந்த கப்பல் மூலம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

சுங்கத்துறை அனுமதி

ஆனால் இதற்கு சுங்கத்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் கப்பலில் அரிசியை ஏற்றி இலங்கைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

புதுவை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றால் அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதுவை துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சரக்கு கப்பலை மீனவர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.


Next Story