லாரியில் இருந்து தவறி விழுந்த சுமைத்தூக்கும் தொழிலாளி
காரைக்காலில் லாரி மீது தூங்கி கொண்டிருந்த சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்க கலக்கத்தில் தவறி கீழே விழுந்தபோது இரும்பு கேட் கம்பி குத்தியதில் பரிதாபமாக இறந்தார்.
காரைக்கால்
லாரி மீது தூங்கி கொண்டிருந்த சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்க கலக்கத்தில் தவறி கீழே விழுந்தபோது இரும்பு கேட் கம்பி குத்தியதில் பரிதாபமாக இறந்தார்.
சுமைத்தூக்கும் தொழிலாளி
சேலம் மாவட்டம் சங்ககிரி மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (வயது48). அவரது தம்பி லட்சுமணன். இருவரும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள். சம்பவத்தன்று இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் நாகை மாவட்டம் பூந்தோட்டத்தில் பஞ்சு ஏற்றுவதற்காக லாரியில் வந்தனர்.
பின்னர் அங்கிருந்து காரைக்காலை அடுத்த அம்பகரத்தூருக்கு சென்றனர். அங்கு வேலை முடிந்ததும், நேற்று இரவு அங்குள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, லாரி மேற்பகுதியில் ராமுவும், லாரியின் கீழே தம்பி லட்சுமணன் உள்ளிட்ட சிலரும் படுத்து தூங்கினர்.
இரும்பு கேட் குத்தியதில் பலி
இரவு 11 மணி அளவில் ராமு தூக்க கலக்கத்தில் லாரியில் மேற்பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே வீட்டின் இரும்பு கேட் இருந்தது. அந்த கேட்டில் உள்ள கம்பி ராமு மீது குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் உள்ளிட்ட சிலர் ராமுவை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராமு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.